பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (06.06.2018)

2992 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு நவம்பரில் விசாரணை

அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணையை ஆரம்பிக்க செய்ய கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (06) அழைக்கப்பட்டது.

இதன்போது வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணை செய்ய தீர்மானித்த நீதிபதி அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அந்த திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு சுகாதார பாடம் கட்டாயமாகிறது

சுகாதார பாடத்தினை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் உள்ளடக்கி குறித்த யோசனையை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சுகாதார நோய்கள் வயது வேறுபாடின்றி பலரையும் பீடித்து கொண்டிருக்கின்றன. சுகாதாரம் தொடர்பான சரியான அறிவின்மையே இதற்கான மிக முக்கிய காரணமாகும்.

அதன்படி சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவுறுத்துவது அத்தியவசிய ஒன்றாக மாறியுள்ளதால் சுகாதார பாடத்தினை கட்டாய பாடமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கு WHT வரியை அறவிடாதிருக்க ஜனாதிபதி ஆலோசனை

தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கு 14% நிறுத்தி வைக்கப்பட்ட வரியை (WHT) அறவிடாதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எழுத்துமூலம் நிதியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சுவர் இடிந்ததில் சிறுவர்கள் காயம்

மடுல்கலை 12 ஆவது குடியிருப்புக்குச் சொதந்தமான வீடொன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சமயலறையின் சுவர் இடிந்து வீழந்ததில், சிறுவர்கள் இருவர் காயமடைந்து, நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நேரம் முடிந்து வீடு வந்த சிறுவர்கள் உணவு உட்கொண்ட சந்தர்ப்பத்திலேயே, சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. இடிபாட்டுக்குள் சிக்கிகொண்டிருந்த சிறுவர்களை மீட்டு, பிரதேசவாசிகள், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பகடிவதையைத் தடுக்க புதிய செயலி

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை பகடிவதையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், அப்பல்கலைக்கழகத்தில் பகடிவதையை நிறுத்தவும் புதிய அவசரகால பாதுகாப்பு செயலி ஒன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் தொடர்பு முகவர்களுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியினூடாக, பகடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதற்கு காரணமானவர்கள் குறித்த முறைபாட்டை பதிவு செய்யலாம் என கொழும்பு பல்கலைக்கழக தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment