பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (06.06.2018)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நுழைவாயில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட கௌனியகம இடையில், பெல்பொல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலை ஜூன் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒரு பில்லியன் ரூபா செலவில் இந்த புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மில்லெனியே தொழிற்துறை வலயத்திற்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் இந்த நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியஆராய்ச்சி நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதேவேளை, தொம்பே – எஸ்வத்த பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தினையும் ஜூன் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை – கடல் கொந்தளிப்புடன் கடும் காற்று வீசும்

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டை சுற்றிய கடற்பரப்பில் காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொணராகலை, குருணாகலை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் கேகாலை பிரதேசங்களுக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களுக்கு மணிக்கு சுமார் 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறை மற்றும் பொத்துவில் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

’பந்துலவுக்கு கோட்டா பிரதமர் பதவியை தரப்போவதில்லை’

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பந்துல குணவர்தன இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கதைப்பதால், அவருக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை தரப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொழிற்சங்கங்களை கொண்டுவருவதற்கு சிங்கப்பூருக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், இன்றை நாடாளுமன்ற வாய்மூல் வினாவிடை நேரத்தின்போது, பந்துல எம்.பியின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிவர்,

”போட் சிட்டி, ஹம்பாந்தோட்டத் துறைமுகம், சங்கிரில்லா, ஆகியவற்றை சீனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கசவின் ஆட்சிக் காலத்தில் வழங்கும்போது எங்களுக்கு கூறவில்லை” என்றார்.

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிதாக 500 பஸ்கள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, புதிதாக 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, நகரங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக 50-54 ஆசனங்களை கொண்ட 400 பஸ்களையும், கிராமிய மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக 32-35 ஆசனங்களை கொண்ட 100 பஸ்களையும் கொள்வனவு செய்வதற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொழிலாளர்களுக்கு புதிய சட்டம்

தொழில் திணைக்களத்தின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை சேவையாளர்களின் சேவை நிபந்தனைகள், சமூக பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு தொடர்பில் 61 சட்டங்கள் செயற்படுத்தப்படுவதுடன், அவற்றில் 27 மாத்திரமே பிரயோக ரீதியாக செயற்பட்டு வருகின்றது.

எனவே அவற்றில் காணப்படுகின்ற கருத்து வேறுபாடுகள், மற்றும் மக்கள் அதனால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் அவர்களை மீட்டெடுக்கும் வகையில் தனி சட்டமொன்றை தயாரிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் விசேடமாக இலங்கையின் தொழிலாளர் சக்தியை பொருளாதாரத்தின் பங்காளர்களாக இணைத்துக் கொள்வதற்கு அவசியமான சேவை நிபந்தனைகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனடிப்படையில், தொழிலாளர் தொடர்பில் காணப்படுகின்ற பல்வேறு முக்கிய சட்டங்களுக்கு பதிலாக சேவையில் ஈடுபடுவோர் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவிந்திர சமரவீரவால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Comments (0)
Add Comment