பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (07.06.2018)

மௌபிம மீதான வழக்குகளை மீளப்பெற்றுக்கொண்ட பாட்டலி..!!

தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார்.

மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது 1 பில்லியன் மற்றும் 500 மில்லியன் இழப்பீடு கோரி தொடுக்கப்பட்டிருந்த மானநஷ்ட வழக்குகள் இரண்டே இவ்வாறு அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளையும் இன்று (07) இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் குழுவில் இலங்கையும் தெரிவு..!!

ஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில், இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

2018 – 2022 ஆண்டு வரையான காலப்பகுதிக்கு குறித்த குழுவில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பரிஸ் நகரில் நேற்று (06) நடைபெற்ற யுனெஸ்கோவின் 7ஆவது கூட்டத் தொடரின் போதே இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இவ் வாக்கெடுப்பிலேயே இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பில் பங்களாதேஷ், சீனா, ஜப்பான், கசகஸ்தான், தாய்லாந்து, மலேசியா, பலாவு மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகள் போட்டியிட்டன.

பலாவு இதற்கான தேர்தலில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து ஏனைய ஏழு நாடுகள் தேர்தலில் கலந்துகொண்டன.

வாக்கெடுப்பில் சீனா, இலங்கை, ஜப்பான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 123, 122, 107, மற்றும் 98 வாக்குகளை பெற்றுக்கொண்டன.

ஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான இந்த குழுவில் 4 நாடுகள் அங்கம் வகிக்கும் நிலையில் இலங்கை 4 வது நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று..!!

8 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமான பின்னர் கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளது.

8 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு மே மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முன்னர் இருந்த கோப் குழுவே மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என அதில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் முன்னாள் கோப் குழுவின் உறுப்பினராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயவிற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோப் குழு இன்று பிற்பகல் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் புதிய குழுத்தலைவர் நியமிக்கப்படவுள்ளதாகவும், பெரும்பாலும் முன்னாள் குழுத்தலைவரான மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்நெத்தியே இம்முறையும் தெரிவு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கோப் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெறவில்லை என்று உறுதி மொழி வழங்க வேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment