பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (07.06.2018)

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி..!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160.0069 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனத் நிஷாந்த பெரேராவை கைது செய்ய பிடிவிராந்து..!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவிராந்து ஒன்றை சிலாபம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் சிலாபம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கிற்கு ஆஜராகாத காரணத்தால் சிலாபம் நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியான மஞ்ஜுள ரத்னாயக்கவினால் இன்று (07) இந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரும் நேற்று (06) காலை சிலாபம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகிய போது மேல் நீதிமன்ற நீதிபதி சுகயீனம் காரணமாக விடுமுறை எடுத்திருந்ததால் சிலாபம் மேல் நீதிமன்ற பதிவாளர் அஜித் நிஹால் ஜயசிங்கவினால் குறித்த வழக்கு ஆகஸ்ட் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி அப்போது இருந்த ஆராச்சிகட்டுவ பிரதேச செயலாளரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியலில்..!!

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (07) பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ஜூண மகேந்திரனின் கடன் அட்டை நிலுவைத் தொகையை செலுத்தியது மென்டிஸ் நிறுவனம்..!!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூண மகேந்திரனின் கடன் அட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 3.2 மில்லியன் ரூபா கடன் அட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை சட்ட மா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (07) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment