பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (08.06.2018)

நகல்ஸ் காணிகள் தனியாருக்கு வழங்கப்படவில்லை..!!

பாதுகாக்கப்பட்ட நகல்ஸ் வனப் பிரதேசத்திற்கு உரித்தான காணிகள் எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது முதலீட்டாளர்களுக்கோ வழங்கப்படவில்லை என்று தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற தோட்டக் கம்பனிகளுக்கு கழிவு நிலங்கள் மாத்திரம் தனியார் முதலீட்டுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி அறிக்கையின் சீ 350ம் பகுதியை வௌியிடுவது விசாரணைக்கு பாதிப்பல்ல..!!

ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு மேலும் உறுப்பினர்கள்..!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் மேலும் உறுப்பினர்கள் சிலர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் நேற்று (07) வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களையும் அழைத்து தொகுதி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய மட்டத்தில் உப குழுக்கள் என்பன நிமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது..!!

இரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று (08) புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்ற சம்பவத்தில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு இரகசியப் பொலிஸார் முயற்சிப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அமைச்சரவையின் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருந்ததாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் கூறியுள்ளார்.

தனக்கு எதிராக இரகசியப் பொலிஸார் விசாரணை செய்துள்ள விதம் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் இருப்பதாகவும், இதனூடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தனக்கு எதிரான விசாரணை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும், தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறும் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment