;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (08.06.2018)

0

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு?..!!

மத்தள விமான நிலையத்தில் எந்தவொரு விமானமும் தரையிறக்கப்படுவதில்லை என்று ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஓய்வு பெற்ற பிரதம நிர்வாக அதிகாரி சுரேன் ரத்வத்த கூறியுள்ளார்.

சுரேன் ரத்வத்த ஓய்வு காலத்திற்கு முன்னரே தனது முன்கூட்டிய ஓய்வுக் கடிதத்தை நேற்று (07) ஶ்ரீலங்கன் விமான சேவையிடம் ஒப்படைத்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூன் 05ம் திகதி இடம்பெற்ற விமான நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பெரும்பாலும் மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அதன் பங்காளியாகும் யோசனை ஒன்று இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கடந்த ஆண்டு கூறியிருந்தமை கூறத்தக்கது.

பகிடி வதையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் இணைந்து சிந்திக்க வேண்டும்..!!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (08) பண்டாரவளை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மனிதாபிமானமற்ற பகிடிவதை காரணமாக கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு வகையான விரும்பத்தகாத விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்க உள்ள மாணவர் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள இந்த சவாலுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் சில அதிகார மோகம் பிடித்த அரசியல் அமைப்புக்கள் செயற்படுவதாகவும் நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த விரும்பத்தகாத நிலைமைகள் குறித்து அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எம்.பிகளின் வரப்பிரசாதங்களை விளக்கிய சபை முதல்வர்..!!

நாடாளுமன்ற உறுப்பினரொருவர், இராணுவப் பிரதானியொருவரைச் சந்திக்க வேண்டுமாயின், அதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்​டுமெனக் கூறப்படுவது தவறென, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனால், நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில், சார்ள்ஸ் எம்.பி கூறியதாவது,

“பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைப்பதற்காக, இராணுவ அதிகாரியொருவரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரியிருந்தேன். இருப்பினும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வாருங்களென்று, அவ்வதிகாரி கூறினார். இது குறித்து, பாதுகாப்பு அமைச்சுக்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பினேன். ஆனால் எனக்கு, இதுவரை பதில் கிடைக்கவில்லை.

“இவ்வாறான சம்பவங்களால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில், எம்மால் மக்களுக்கான சேவைகளை எவ்வாறு முன்னெடுப்பது? இதற்கான தீர்வு வேண்டும்” என்று, சார்ள்ஸ் எம்.பி கோரியதை அடுத்தே, சபை முதல்வர், மேற்கண்டவாறு கூறினார்.

கண்ணிவெடி அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி..!!

இலங்கையில், யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால், 845 மில்லியன் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

மைக் எக்ஷன் கு‌ரூப் (மெக்) மற்றும் இலங்கையின் டெவ்லன் அசிஸ்டன்ஸ் ஃபோ சோஷல் ஹார்மனி ஆகிய இரு நிறுவனங்களினூடாக, அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*