Edit பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (09.06.2018)

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் முறுகல்..!!

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதற்கமைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலளார் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக கொழும்பிலே அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் இங்கே கண்துடைப்பிற்காக இப் போராட்டத்தில் பங்குபற்றியிருக்கின்றார்கள். என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் செல்வராசா கஜேந்திரனுடன் முரண்பட ஆரம்பித்தனர்.

இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அங்கு நிலைமைகள் மோசமடைந்து செல்வதை அவதானித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இரு தரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையின் மூத்த கலைஞர் காலமானார்..!!

சிரேஷ்ட நாவலாசிரியர், தொலைகாட்சி மற்றும் திரைப்படத் திரை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சோமவீர சேனநாயக்க காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 சாட்சிகள் இருந்தால் வெள்ளிக்கிழமை பெருநாள்..!!

நாட்டில் எங்காவது, பிறை கண்டதாக இரண்டு பேர் சாட்சி சொல்வார்களானால், வெள்ளிக்கிழமை (15) பெருநாளை கொண்ணடாடலாம் என, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிடியில் நேற்று (08) இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி புனித நோன்பு ஆரம்பமானது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாள் எடுக்க வேண்டி வந்தால், பிடித்த நோன்புகள் 28 ஆகவே அமையும்.

நோன்பு 28 உடன் நிறைவடைந்தால் ஒரு நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்பது சன்மார்க்கச் சட்டமாகும் எனத் தெரிவித்தார்.

நீர்கொழும்பு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது..!!

அரசாங்கம் அறிவித்துள்ள புதிய மண்ணெண்ணெய் குறைப்பு வேண்டாம் எனவும் பழைய விலையான 44 ரூபாய்க்கே, மண்ணெண்ணெயை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையேல் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் நீர்கொழும்பு மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள சாந்த செபஸ்த்தியன் தேவாலய முன்றலில், இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று ஆரம்பமாகி இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

நீர்கொழும்பு ஐக்கிய மீனவர் சங்கத்துடன் இணைந்து நீர்கொழும்பில் உள்ள மீனவர் சங்கங்கள், இந்தச் சத்தியாக்கிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பெரும் எண்ணிக்கையான மீனவர்களும் தேவாலய முன்றலில் குழுமியுள்ளனர்.

நாளை நள்ளிரவு 12 மணி வரை சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெறும் எனவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போன்று பழைய விலைக்கு மண்ணெண்ணெயை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மீனவர்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் எனவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததன் காரணமாக, நீர்கொழும்பில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன், படகுகள் களப்பு மற்றும் கடற்பகுதிகளில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.

தொழிலுக்கு செல்லாததன் காரணமாக, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகரிக்கப்பட்டுள்ள விலைக்கு மண்ணெண்ணெயை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபட்டால் நட்டம் ஏற்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment