பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (10.06.2018)

கட்டாரிற்கு நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சுற்றுலா ஒன்றிற்காக கட்டார் இராஜ்ஜியத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டார் விமான சேவையின் QR 669 என்ற விமானத்தில் அவர் கட்டார் இராஜ்ஜியம் நோக்கி பயணித்தாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பிரதமருடன் மேலும் 5 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டியிடம் விசாரித்த போது பிரதமர் தனிப்பட்ட சுற்றுலா ஒன்றிற்காக கட்டார் இராஜ்ஜியம் நோக்கி பயணித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

6700 கிலோ சந்தனத்துடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் படுத்தப்பட்டிருந்த வௌ்ளை சந்தனக்கட்டைகளுடன் இருவரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பன்னல, எலபடகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 6700 கிலோ கிராம் எடையுடைய 175 பொதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பன்னல பகுதியை சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

74 பொலிஸார் கௌரவிப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வாகனப் போக்குவரத்துக் குற்றங்கள் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் ஊடாக, அபராதப் பணம் அறவிட நடவடிக்கை எடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 74 பேர், பணப்பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மத்திய மாகாணத்தின், நுவரெலியா மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.ஜயசூரிய தலைமையில், கடந்த 8ஆம் திகதியன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, மேற்படி 74 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும், 5 இலட்சத்து 11 ஆயிரத்து 625 ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினது எண்ணக்கருவின் கீழ், இந்தப் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோட்டன் பிரிட்ஜ், நல்லத்தண்ணி, வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாருக்கே, இவ்வாறு பணப் பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு

மாத்தளை மாவட்டத்தின் பாடசாலை மாணவர்கள், போதைப்பொருளுக்குப் பெருமளவில் அடிமையாகுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என, மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பாலித ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாநகர சபையில் அண்மையில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாத்தளை மாவட்டத்தினும், மருந்து விற்பனை நிலையங்களின் தொகை, பெருமளவில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஓட்டோக்களில் போதைப்பொருள் விற்பனை செய்யும் அளவுக்கு, தற்போது நிலைமை மாறியுள்ளது. பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் செயற்பாடுகளே அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன.

“இது தொடர்பில், மாத்தளை பொலிஸ் நிலையத்துக்கு, மாநகர சபை அறிவுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்த மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹார, மேற்படி விடயம் குறித்து உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதெனவும், பொலிஸாருக்கும் கல்வி அமைச்சுக்குக்கும் இந்த விடயத்தை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்துவித ஒத்துழைப்புகளையும் வழங்க, மாநகர சபை தயாராக உள்ளதெனவும் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment