பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (11.06.2018)

நீர்கொழும்பு, தெஹிவளையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றல்

நீர்கொழும்பு, தெஹிவளை மற்றும் கல்கிசை ஆகிய கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

மிரிஸ்ஸ கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அண்மையில் அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய, கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 550 மில்லியன் ஒதுக்கீடு

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வு கூட வசதிக்கும் ஏற்பாடு செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கென அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மேலும் 300 மில்லியன் ரூபா இதற்கென வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் வீதம் காணிப் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், இதனூடாக பாடசாலைகளுக்கான காணியின் தேவை பூர்த்திசெய்யப்படுமெனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

5 வயது சிறுமி கடத்தல்; எண்மரின் விளக்கமறியலும் நீடிப்பு

அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது (தற்போது வயது 6) சிறுமியின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால உள்ளிட்ட எண்மரின் விளக்கமறியலும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், இன்று (11) அறிவித்துள்ளது.

தயாசிறி எம்.பி, சி.ஐ.டிக்கு வருகை

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டி) வருகைதந்துள்ளார்.

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடமிருந்து தான், 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான கா​சோலையை பெற்றேன் என அண்மையில் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு, இன்றையதினம் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை

​தேர்தலின் காலத்தின் போது வேட்பாளர்கள் தமது பணத்தை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேட்பாளர்களின் பணப்பாவனையை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையை வந்தடைந்தார் ஜோன் மெட்டோன்

உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் நடைபெற உள்ள பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் இரு கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்த இரு கூட்டங்களையும் ஸ்லிம் (SLIM) நிறுவனம் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது.

ஜோன் மெட்டோன் பிரபல அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் பயிற்றுவிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்ணெண்ணையின் புதிய விலை குறைப்பை ஏற்க முடியாது – மீனவ சங்கங்கள்..!!

ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 70 ரூபாவாக குறைத்த போதிலும் அதனை தம்மால் ஏற்க முடியாது உள்ளதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, மண்ணெண்ணையை பழைய விலையிலேயே வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 70 ரூபாவாக நாளை (12) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment