பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (11.06.2018)

போராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

6/2006 சுற்று நிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்று (11) மீண்டும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.

BC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

​வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் 90 வீதமான படிவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரியான முறையில் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறும் தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிலர் இறுதித்தருணம் வரையில் குறித்த தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை ஒப்படைக்காததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தேர்தல் தலைமையகம் தெரிவிக்கின்றது.

எதிர்காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெற இருப்பதால் அவற்றிற்கு குறித்த வாக்காளர் பட்டியலே கருத்திற்கொள்ளப்படும் என தேர்தல் தலைமையகம் மேலும் தெரிவிக்கின்றது.

அகழ்வு பணியை நேரில் பார்வையிட்ட ஆயர்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணியை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சோசை ஆகியோர் இன்று (11) நேரில் சென்று அவதானித்துள்ளனர்.

குறித்த அகழ்வுப்பணி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 11 ஆவது நாளாகவும் இன்றும் (11) மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment