பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (11.06.2018)

அரசியல் பிரச்சினைகளால் 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை

அரசியலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் கடந்த காலத்தில் 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த சமுர்த்தி பெறுநர்களுக்கு அவற்றை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குருணாகல, ஹிரியால பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சி எதிர்நோக்கும் நெருக்கடி, பிரச்சினைகள் மற்றும் பிளவுகளை முற்றாக இல்லது செய்து, 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

’சு.க அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்’

பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் மாத்திரம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (10) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு, அரசாங்கத்தையே விமர்சிப்பதில் எவ்வித நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும், ஐ.தே.க அரசாங்கத்திலிருந்து முதலில் சுதந்திரக் கட்சி பிரிந்துசெல்ல வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி ஒருவருக்ககொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் இவ்வாறு அரச தலைவர்கள் பொது வெளியில் கருத்துக்களை வெளியிடுவதானது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறெனினும் தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது குறித்த சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் தற்போது மேலெழுந்துள்ளன.

எனினும் அது நடைபெறவுள்ள தேர்தலை தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு இரகசிய திட்டமோ என எண்ணத்தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் சேவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி, தபால் சேவை ஊழியர்கள் இன்று (11) மாலை 4 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை 4 மணிவரை வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மாலை 4 மணிக்குப் பின்னர் எவரும் கடமைகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை, பணிப்பகிஷ்கரிப்பை தொடரவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் காற்றினால் கண்டி மாவட்டத்தில் 551 பேர் பாதிப்பு

கண்டி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையின் காரணமாக, 5 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய, 116 குடும்பங்களைச் சேர்ந்த, 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 50 வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின், கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர், இந்திக ரணவீர தெரிவித்துள்ளார்.

பாதஹேவாஹெட்ட பிரதேச செயலகப் பிரிவில், 9 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த,58 பேரும்,குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும், பஸ்பாகே கோரளய பிரதேச செயலகத்துக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும், உடுநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பான இடங்களில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 378 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின், கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர், இந்திக ரணவீர தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment