பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (12.06.2018)

சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய 16 பேரையும் சந்திக்கமாட்டேன்

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னை ஜூன் 12 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னை சந்திக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது சாதாரண விடயம் என்ற போதிலும், ஊடகங்களில் வெளியானது போன்ற உத்தியோகப்பூர்வ சந்திப்பு எதுவும் இடம்பெற போவதில்லை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரே வாவியுடன் இணைந்த பூங்கா திறந்து வைப்பு

கொழும்பு நகரின் வாவிக் கரையோரங்களை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ், கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால், மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் இந்தப் பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேரே வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலை மாணவர்களின் எதிர்ப்புப் பேரணியால் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் எற்பட்டுள்ளது.

அத்துடன் வோட் பிளேஸ் வீதியை, தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலோசியசிடம் இருந்து பணம் பெற்ற 50 பேர்; ரஞ்சன் வெளியிட்ட தகவல்

சர்ச்சைக்குரியப பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து காசோலைகளைப் பெற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்ற, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 50 உறுப்பினர்களின் பெயர் விபரங்களுடன், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தாம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (10) தாம் ஆணைக்குழுவின் தலைவர் நெவில் குருகேயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத்து மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த 50 உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்த பிரதியமைச்சர், எனினும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு புதிய நூல்கள், உபகரணங்கள்

வௌ்ளம் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு தளபாடங்கள், நூல்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய நூலக மற்றும் ஆவண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் கிராமிய நூலக அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ், முன்னெடுக்கப்படுகிறது.

காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில், வௌ்ளம் மற்றும் அனர்த்தத்தினால், 18 நூலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 60 நூலகங்கள், பிரிவெனா நூலகங்கள், இராணுவ பிரவினரின் கீழ் இயங்கிவரும் நூலகங்கள் மற்றும் அமைச்சுகளின் கீழ் இயங்கிவரும் 100 க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு புதிதாக நூல்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment