பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (12.06.2018)

நுவரெலிய மாநகர சபையின் முன்னாள் தலைவருக்கு அழைப்பாணை

அரசாங்கத்துக்கு 225,000 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நுவரெலிய மாநகர சபையின் முன்னாள் தலைவர் கமகே மஹிந்த குமாரவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கடந்த 2013ம் ஆண்டு வசந்தகால கொண்டாட்டத்தின் மூலம் நுவரெலியா மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய 225,000 ரூபா பணம் மாநகர சபையின் கணக்கில் வைப்பிலிடப்படாமல் தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி பிரதிவாதியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

முன்னாள் தவிசாளரின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு

2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த குர்மன் ஷேக் என்பவரை கொலை செய்தமை மற்றும் அவருடைய ரஷ்ய நாட்டு காதலியை பாலியல் பலாத்காரம் செய்யதமைக்காக 20 வருட சிறை தண்டனை அனுபவித்து வரும் நால்வர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரன உட்பட நால்வர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (12) இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தங்காலை பிரதேச சபை தவிசாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இரண்டு தடவை மாரடைப்பால் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரன பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், சட்ட மா அதிபரின் உதவியுடன் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரனவுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரணிலின் சவாலை ஏற்றார் மஹிந்த?

வரி வீதத்தை குறைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் வரியை 20 வீதமாக குறைத்துக் காட்டுவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக தெரிவித்து மக்களை தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தமது இயலாமையை மறைத்துக்கொள்வதற்காக மற்றவர்களை குற்றம்சாட்டும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.

பேர வாவி கரையோர பூங்கா மக்களிடம் கையளிப்பு

கொழும்பு நகர வாவிக் கரையோரக் காட்சிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பேர வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கரையோர பூங்காவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) முற்பகல் மக்களிடம் கையளித்தார்.

கொழும்பு நகரை அண்டிய நகர அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள பேரை வாவியின் நீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த சமரசிங்ஹ, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்ஹ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments (0)
Add Comment