பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (13.06.2018)

ஆண் ஒருவரின் சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

கொரகேன, ஊரகஹா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

78 வயது நிரம்பிய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

கடந்த 11ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இதற்கு முன்னர் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அதன்போது இரண்டு வார காலப்பகுதியில் குறித்த கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக தபால் மா அதிபர் ரோஹண ஹெட்டியாரச்சி கூறினார்.

உடன்பாடு எட்டப்பட்டு இரண்டு வார காலம் முடியும் முன்னரே இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வது சரியானதல்ல என்று தபால் மா அதிபர் ரோஹண ஹெட்டியாரச்சி அத தெரணவிடம் கூறினார்.

நாட்டில் வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளதாம்

நாட்டில் தனிப்பட்ட ரீதியிலான வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளமையானது பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகே கூறினார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராவதற்கான காலம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக இதற்கு தீர்வு தேடலாம் என்று பேராசிரியர் அமல் குமாரகே கூறியுள்ளார்.

ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பது மக்களின் பொறுப்பு

ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை தெரிவு செய்வது மக்களின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் பணம் செலவழித்து, தமக்கு நன்மையை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் வாக்களிப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாக அமைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி தெரிவித்துள்ளார்.

பசறை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை நிர்வாக சேவை சங்கம்

நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷேட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் (14) அனைத்து நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – நோயாளிகள் கவலை

கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி உள்ளனர்.

குறித்த மருந்துகளை வெளியில் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு தாங்கள் பெரிதும் சிரமப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலைக்கு சுகாதார அதிகாரிகளின் கவனயீனமே முக்கிய காரணம் என, சிறுநீரக நோயாளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜயந்த வாசலமுனி தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment