பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (13.06.2018)

மாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் சற்றுமுன்னர் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்து இருக்கும் போதே இவர்கள் மூவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் நிலைய குழுவொன்றால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தேரர் விமானம் மூலம் கொழும்புக்கு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது நேற்று (12) இரவு 11 மணியளவில் இனந் தெரியாத மூன்று நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவத்தின் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 04 பொலிஸ் குழுக்களும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற UP – CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த நால்வர் கைது

குளியாப்பிட்டிய, வீரபுர பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 203 கிராம் 189 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியாப்பிட்டிய, தியகமுல்ல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொதுசந்தை அருகில் 2 கிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அநுராதபுரம், ஹிமகந்திய பகுதியில் 2 கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பேராதெனிய, பிலிமத்தலாவ பகுதியில் 5 கிராம் 770 மில்லி கிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேர்ணல் ரத்னபிரியவின் விடயம் தொடர்பில் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்

லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை நிகழ்வு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும், மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு ஒன்றை வழங்குமாறும் விமல் வீரவங்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த, லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ, சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் விஸ்வமடு பகுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது, அப்பகுதி மக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment