பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (14.06.2018)

கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மீது எசிட் தாக்குதல்

கேகாலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தின் உதவி ஆணையாளருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் எசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திறந்திருந்த ஜன்னல் ஒன்றின் ஊடாக இவ்வாறு எசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள உதவி ஆணையாளர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எசிட் வீச்சு தாக்குதல் நடத்திய சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கோட்டாவை சந்தித்த 16 உறுப்பினர்கள்

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக இவ்வாறு ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

சரத் என் சில்வாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று அந்த மனு அழைக்கப்பட்ட போது பெரும்பான்மை தீர்மானத்தின் படி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு மாற்றமானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மனுவுக்கு எதிர்ப்பு வௌியிட்ட சட்டமா அதிபர், அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

அதன்படி மனுவை விசாரிக்காமல் நிராகரிப்பதற்கான பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்தார்.

ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு

ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு இன்றைய தினம் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், இவருக்கான தண்டனை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதால், நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.

இதேவேளை ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 10 பேரைக்கொண்ட பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்புக்காக, உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment