பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (14.06.2018)

மூன்றாவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்

தபால் சேவை ஊழியர்களின் பணி நிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தபால் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் கடந்த 11ம் திகதி தமது வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சுமார் 26000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.

வேலை நிறுத்தம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தபால் நிலையங்கள் பாழடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டசிக்கல் இல்லாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுடனும் தான் எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவ்வாறான குழுக்களை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகள் இணைந்து இன்று அரசாங்கம் அமைத்திருப்பதாக அவர் கூறினார்.

சட்ட சிக்கல் இல்லை என்றால் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது மக்கள் எதிர்பார்க்கும் தலைவரான மஹிந்த ராஜபக்‌ஷ என்றும் அவ்வாறில்லாவிட்டால் மஹிந்த ராஜபக்‌ஷவால் கூறப்படும் நபருக்கு ஆதரவளிப்பதாகவும் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக மக்கள் எதிர்காலத்தில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்றும் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

சிங்கராஜா வன யானைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினால், சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழந்து விடும் என யுனெஸ்கோ அமைப்பு மின்னஞ்சல் ஊடாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து பல தரப்பிலிருந்தும் யானைகள் இரண்டையும் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கராஜா வனத்தில் உள்ள கடைசி யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி யானை பலி

வெல்லவாய, நெலுவகல கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, யானையொன்று பரிதாபகரமாக இன்று (14) உயிரிழந்துள்ளது.

தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில், வீட்டுக்கு நீரைப் பெறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நீர்பம்பியில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பிலுள்ள மின்சாரம் தாக்கியதாலேயே, யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த யானை 25 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டதென வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலையில் பிடியாணை; மாலையில் நீதிமன்றில் முன்னிலையானார் விமல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டது.

இதற்கு முன்னர் பல தடவைகள் அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவின் பின்னர் பிற்பகல் பிற்பகல் 3 மணியளவில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

போலி கடவுச் சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டுத் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக விமல் வீரவன்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment