பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (16.06.2018)

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல மாணவர்களுக்கு சிறந்த கல்வி முறை ஒன்று தேவை

போட்டித் தன்மை மிக்க கற்றல் முறைமையால் சமூகத்துக்கு அவசியமான சில நற்குணங்கள் மாணவர்களிடமிருந்து அற்றுப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டை முன்னோக்கி சிறந்த முறையில் கொண்டு செல்ல மாணவர்களுக்கு சிறந்த கல்வி முறை ஒன்றை வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது

பூஜாபிட்டிய, தொலபிஹில்ல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, கண்டிக்கு பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து 12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் இவ்வாறு சந்தேக நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, பட்டகொள்ளதெனிய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கலகேதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பூஜாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களால் வெறுக்கப்படும் ஒரு அரசாங்ம்

இந்த நாட்டில் பொதுமக்களால் வெறுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்குமானால், அது இந்த நல்லாட்சி அரசாங்கமாகத் தான் இருக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சிங்கள புதுவருடத்தை மாற்றினார்கள், மே 1 ஆம் திகதியை 7 ஆம் திகதிக்கு மாற்றினார்கள், வொட்காவை தண்ணீராக மாற்றினார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் பொது மக்கள் ஒரு புதிய அரசாங்கத்திற்காக காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘சிறையிலுள்ளவர்களை விடுவிப்பதே தமிழக அரசின் நிலைபாடு’

இந்தியாவின் முன்னாள் பிதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள எழுவரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு” என்று, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு.

“தமிழக அரசின் நிலைப்பாட்டை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வெற்றி காண்போம்.

“அத்துடன், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வேதனையை தமிழ் அரசாங்கம் உணர்ந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சா/த பாடங்கள் 6ஆகக் குறைகின்றன

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் மாணவர்கள் கற்கும் பாடங்களை 6ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதற்கான நடவடிக்கைகள், தேசிய கல்வி நிறுவனத்தினூடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்காக 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment