பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (18.06.2018)

கிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேநபர்களுக்கு விளக்கமறியல்

கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான அசோல சம்பத் மற்றும் ஏனைய இரண்டு சந்தேகநபரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்கேநபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்கேநபர்களை திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

ஏனைய சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாவை முடித்து நாடு திரும்பினார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 8 நாள் வெளிநாட்டு சுற்றுலாவை முடித்த விட்டு இன்று (18) மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் இருந்து வருகைதந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்று விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 3.15 மணியளவில் டோஹவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பாடசாலைகள் இன்று திறப்பு

புனித ரமழான் நோன்புப் பெருநாள் விடுமுறைக்காக, மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் யாவும், கல்வி நடவடிக்கைகளுக்காக, இன்று (18) மீண்டும் திறக்கப்படவுள்ளனவென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள், கடந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மூடப்பட்டன. பாடசாலை வளாகங்களில், டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று பேரணி

9 கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில், கடந்த ஏழு நாட்களாகப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, கொழும்பில் இன்று காலை 10:30க்கு, பேரணியொன்றை நடத்தவுள்ளது.

அஞ்சல் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் பேரணி, ஜனாதிபதி செயலகம் வரை செல்லுமென்று தெரிவித்த அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர், இப்பேரணியில், சுமார் 22 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, மேற்படி 9 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த திங்கட்கிழமையன்று (11) பிற்பகல் 4 மணி முதல், தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது.

Comments (0)
Add Comment