பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (18.06.2018)

பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிப்பு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வெளிநாடு சென்றுள்ளார்.

இதனால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க வழக்கு – குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு தொடர்பில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 மனுக்களுக்கான விசாரணை, பியசாத் டெப்த் மற்றும் மூர்து பிரணாந்து ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக செல்ல உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161.00 ஆக வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161.00 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தால் லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடல்

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment