பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (18.06.2018)

பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ‘சொல்டா’ எனும் அசித்த கைது

பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ´சொல்டா´ எனும் அசித்த பிரேமதிலக கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொரள்ள பகுதியில் வைத்தே, அசித்த பிரேமதிலக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதுருகிரிய பிரதேசத்தில் அழகுகலை நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மஞ்சுளா சதுனி அபேரத்ன மற்றும் மாலபே நடை பாதை ஒழுங்கையில் வைத்து கொலை செய்யப்பட்ட ´பொலி ரொஷான்´ என்பவர்களின் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அசித்த பிரேமதிலக இனம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில்

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள ஆர்பாட்டத்தால் கொழும்பு, கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள போதி மரத்தடியில் விசேட பூஜைகளில் ஈடுபட்டதுடன் சத்தியா கிரகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 30 ஆம் திகதி தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தபால் ஊழியர்களிள் வேலை நிறுத்தத்தால் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகரும் இசை கலைஞருமான ஐவோ டெனிஸ் காலமானார்

பிரபல பாடகரும் இசை கலைஞருமான ஐவோ டெனிஸ், அவரது சீதுவ இல்லத்தில் வைத்து இன்று (18) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 86 ஆகும்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன் கிழமை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இருவருக்கும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட இருவர் ​நேற்று (17) கதிர்காமம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமாராம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments (0)
Add Comment