பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (21.06.2018)

பாராளுமன்ற காணிக்கான உறுதிப்பத்திரம் சபாநாயகரிடம் கையளிப்பு

பாராளுமன்றம் அமைந்துள்ள காணிக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்ட நிரந்தர உறுதி ​நேற்று (20) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் இது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்குரிய உரிமைப் பத்திரத்தின் மூலம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கான இந்தக் காணி பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் – பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு

கலந்துரையாடல்கள் தோல்வி அடைந்த காரணத்தால், தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறும் என தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளருடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்விதமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் நிறைவடைந்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது வேலை நிறுத்த போராட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று (21) தௌிவுபடுத்த இருப்பதாகவும் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதான பாதைக்கு பூட்டு – மாற்று வழிகளை அறிவித்துள்ள பொலிஸார்

மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய வீதியின் மஹவத்த சந்தியில் இருந்து ஆலமரத்தடி சந்தி வரையான பாதையில், வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (22) இரவு 9 மணி முதல் 25 ஆம் திகதி காலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த பகுதியின் ஊடான வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய நீர்குழாய்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இவ்வாறு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் பொலிஸார் அப்பாதையை பயன்படுத்துபவர்களுக்கான மாற்று வழிகள் சிலவற்றை அறிவித்துள்ளனர்.

மாதம்பிட்டிய சந்தியில் இருந்து கனேமுல்ல பாதை ஊடாக தவலசிங்காராம பாதையின் பஞ்ஞானந்த மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும், பஞ்ஞானந்த மாவத்தையில் இருந்து வரும் வாகனங்கள் தவலசிங்காராம பாதை ஊடாக பயணிக்காது, ஆலமரத்தடி சந்தியை கடந்து புளூமென்டல் வீதியூடாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நீர்கொழும்பு வீதியூடாக பயணிக்கும் கனரக வாகனங்கள் தொட்டலங்க சந்தியில் இருந்து மாதம்பிட்டிய பாதைக்கு உட்பிரவேசிக்காமால், இங்குருகடை சந்தியின் ஊடாக பயணிக்கவும், புளூமென்டல் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் ஆலமரத்தடி சந்தியை கடந்து பஞ்ஞானந்த மாவத்தை ஊடாக அளுத் மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 178 ஆம் இலக்க பேருந்துகள் புளூமென்டல் வீதியூடாக வந்து ஆதர் சில்வா மாவத்தை ஊடாக வேல்ஸ் குமார மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஞானசார தேரருக்காக சாகும் வரையான உண்ணாவிரதம்

சிறைவாசம் அனுபவிக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளைய தினத்திற்குள் பிணை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனின், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக பொதுபல சேன அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு நாளை (22) விசாரணை செய்யப்பட உள்ளதாக, குறித்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேன அமைப்பினர் நேற்று (20) கோட்டை ஆலமரத்தடியில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment