பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (21.06.2018)

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூலை 05ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (21) பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை வரையறுக்கப்பட்டு பர்பசுவல் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவரும் அர்ஜுன் அலோசியஸின் தந்தையுமான ஜெப்ரி அலோசியஸை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த வழக்குத் தவணையின் போது அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.

சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்றும், பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01ம் திகதி முதல் 11ம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச தகவல் திணைக்களம் இது தொடர்பான ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான தேரரை நேரில் சந்தித்த பிரதமர்

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரரை பிரதமர் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

கிரிவெஹர ரஜமகா விகாரை வளாகத்தில் வைத்து கடந்த 12 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருடைய சுக துக்கங்களை விசாரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) மாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

பொலிஸ் காவலில் இருந்த சந்தர்ப்பத்தில், 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை 10 இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு அனுமதித்த கெப்பத்திக்கொல்லாவ மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹர்ச த அல்விஸ், பிணையாளர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (21) பதவிய நீதவான நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி மீண்டும் பதவிய சுற்றுலா நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 8ஆம் திகதி கூரைத்தகடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், பதவிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக வெலிமடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தார்.

குற்றவாளியான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், இந்த சம்பவம் தொடர்பில் வெளியில் தெரிவித்தால் “துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவேன்” என பாதிக்கப்பட்ட சிறுவனை அச்சுறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments (0)
Add Comment