பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (23.06.2018)

இரட்டைக் குடியுரிமை பெறுவதற்காக அதிகளவானோர் விண்ணப்பம்

இலங்கையில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்காக வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார்.

இதற்காக ஒரு மாதத்துக்கு சுமார் 1000 விண்ணப்பங்கள் அளவு கிடைப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இவை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 800 பேருக்கு ஜூலை முதல் வாரத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்போருக்கான கட்டணம் 3 இலட்சம் ரூபா என்பதுடன், அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கான கட்டணம் 50,000 ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் போராட்டம் 13வது நாளாகவும் தொடர்கிறது

தபால் தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (23) 13வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய பிரதிநிதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இன்று தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

முன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி நிரந்தரமாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த 11ம் திகதி அவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக கொழும்பில் உள்ள தபால் தலைமையகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

‘16 உறுப்பினர்களுக்கும் சிக்கல்’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும், இதுவரை ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக, அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த 16 உறுப்பினர்களுக்கும் ஒன்றிணைந்த எதிரணியில் இணைவதற்கு அவர்கள் சுதந்திரக் கட்சியில் உள்ள பொறுப்புகளில் இருந்து விலகவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இதனால், குறித்த 16 உறுப்பினர்களும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

’போதைக்கு மாணவர்கள் அடிமை’

பாடசாலை மாணவர்கள் பலர்,போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக,தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தரம் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்களிடத்தில் இருந்தே, போதைப்பொருள் பாவனை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ள அந்த வாரியம், இந்த சூழ்நிலையில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Comments (0)
Add Comment