பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.06.2018)

வௌ்ளவத்தை – கொள்ளுப்பிட்டி மெரைன் டிரைவ் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

நாளைய தினம் வௌ்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான மெரைன் டிரைவ் வீதி போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி நாளை (24) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை இந்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு தேசிய சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாத்தறை சம்பவம்; மூன்று பேருக்கு 02ம் திகதி வரை விளக்கமறியல்

மாத்தறை நகரில் நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்வம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரும் நேற்றைய தினம் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

காலி பிரதான நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த சாமர இந்திரஜித் என்பவர், பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இன்று உயிரிழந்தார்.

ஹிட்லர் ஆட்சி குறித்த கருத்துக்கு விளக்கமளித்த தேரர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் விளக்கமளித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்யும் போது நேரடியான கொள்கை இருக்க வேண்டும் என்றும் ஹிட்லர் போன்று மனிதர்களை கொலை செய்து ஆட்சி செய்ய வேண்டும் என்று அர்த்தப்பட தான் கூறவில்லை என்றும் வெடருவே உபாலி தேரர் விளக்கமளித்துள்ளார்.

இன்று அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாக அர்த்தப்படுத்துவது தவறாகும் என்றும், இது தொடர்பில் முக்கிய அரசியல் தலைவர்கள் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் போன்று இராணுவ ஆட்சியை கொண்டுவந்தாவது இலங்கையைக் கட்டியெழுப்புமாறு அண்மையில் வெடருவே உபாலி தேரர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தமை கூறத்தக்கது.

Comments (0)
Add Comment