பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (25.06.2018)

வாக்குமூலத்தை வழங்கியதன் பின் FCID யை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகி இருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (25) காலை 9 மணியளவில் அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகி இருந்தார்.

அவரிடம் சுமார் 2 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி – கொழும்பு பேருந்துகள் வேலைநிறுத்தத்தில்

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று (25) காலை முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இருந்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு, குறுந்தூர பேருந்துகள் தடையாக இருப்பதாக தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கு தடை

டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள அஞ்சல் சேவைகள் அமைச்சிற்கு முன்னால் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் மருதானை முதல் கோட்டை வரையான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதும் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.

தற்போதும் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை (26) நடைபெற உள்ள தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழு உடனான கூட்டத்தில் தபால் சேவை ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

அதன் பின்னர் அத்தீர்மானம் அமைச்சரவையின் அனுமதியை பெற்றபின் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தை அனுமதிப்பதாக தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment