பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (25.06.2018)

பொரள்ள பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது

பொரள்ள பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) மாலை 6.10 மணியளவில் பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதுல்வத்த பகுதியில் வைத்து 24 கிராம் 110 மில்லி கிராம் ஹெரோயினுடன் 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் நேற்று (24) மாலை 7.10 மணியளவில் பொரள்ள மயானத்திற்கு அருகில் வைத்து 23 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயினுடன் 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இரவு 8.30 மணியளவில் பொரள்ள மயானத்திற்கு அருகில் வைத்து 23 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயினுடன் 20 வயதுடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பலி

மஹியங்கன, தெஹியத்தகண்டிய வீதியின் தெல்தெனிய பகுதியில் இன்று (25) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கதிர்காமம் முகாமில் கடமையாற்றும் கம்மெல்ல, கல்னேவ பகுதியை சேர்ந்த மஹேஷ் பஸ்நாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிராந்துருகோட்டே பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்ப இராணுவ முகாமை அகற்ற மாட்டோம்

மீண்டும் யுத்தம் வரும் என்று சிலர் சொல்கிறார்கள், முகாம்களை அகற்றுகிறோம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவும் அகற்றவும் முழு சுதந்திரம் இராணுவத்தினருக்கு உண்டு எனவும், மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தந்திரமான முறையில் திருடிய குழுவினர் கைது

வீட்டுற்குள் ஆட்கள் இருக்கும் போதே மிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, கல்கந்த பகுதியை சேர்ந்த 17, 21 மற்றும் 24 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து இவ்வாறு திருடி வருவதாகவும் அவ்வாறு திருடும் பொருட்களை விற்று பெறும் பணத்தை ஹெரோயின் வாங்குவதற்கு பயன்படுத்துவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட மடிக்கணினிகள் மூன்றும், தங்க மோதிரங்கள் மூன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment