பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (26.06.2018)

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் ஆரம்பம்

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத் தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை 1970 ஆம் ஆண்டு இந்த தினத்தை பிரகடனப்படுத்தியது.

போதைப்பொருள் பாவனை அற்ற சர்வதேச சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான இலக்கை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்துவது இந்த தினத்தின் நோக்கமாகும்.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத் தினத்திற்கு அமைவாக அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபை இன்று (26) தொடக்கம் ஒரு வாரத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனம் செய்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பேராசிரியர் சமன் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் பெற்றோருக்கும் இது தொடர்பாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விளக்கம் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலை நிறுத்தம் சம்பந்தமாக இன்று விஷேட பேச்சுவார்த்தை

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் சம்பந்தமாக இன்று (26) காலை விஷேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற உள்ளதாக தபால் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

தேசிய சம்பள ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித தீர்மானமும் இன்றி முடிவடைந்ததாக அந்த சங்கம் கூறியுள்ளது.

அதன்படி தொழிற்சங்க போராட்டத்தை இன்று முதல் மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறினார்.

இதேவேளை தாம் பணியாற்றும் அலுவலகத்திற்கு பணிக்கு செல்ல முடியாத பணியார்கள் அருகில் உள்ள தபால் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு செல்லுமாறு தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.

அவ்வாறு பணிக்கு செல்வோருக்கு போக்குவரத்து வசதி மற்றும் தேவையான ஏனைய வசதிகளை செய்து கொடுக்குமாறு அனைத்து மாகாண பிரதி தபால் மா அதிபர்கள் மற்றும் பிரதேச தபால் அத்தியட்சகர்களுக்கு அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தபால் மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் குழந்தை ஒன்று உட்பட இருவர் பலி

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் 26 ஆவது கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் வேனின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

25 வயதுடைய ஒருவர் மற்றும் 11 வயதுடைய குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பேருந்து ஓட்டுனர் தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை வழங்க மறுப்பு

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்தப் பகுதியில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது

மாகாண சபைத் தேர்தலை பிற்போட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது என கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி தேர்தலை நடத்த தன்னுடைய கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment