பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (26.06.2018)

எந்தவொரு கட்சியும் தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாது

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிர்வரும் தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாது என முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எந்த கட்சியானாலும் இன்னொரு கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குசல் ஜனித் பெரேராவுக்கு பாரிய காயங்கள் எதுவுமில்லை

இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேரா விளம்பர பலகை மீது விழுந்ததில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளது.

பாரிய காயங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது அவர் விளம்பர பலகை மீது விழுந்துள்ளார்.

இன்று காலை நேர ஆட்டத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயற்திட்டம் ஜூலை மாதம்

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக “ஜன பவுர” எனும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

எல்லா பிரதேசங்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் குழு ஒன்றை நியமித்து, அவர்களின் ஊடாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிந்து, அவற்றிக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அதனடிப்படையில் இதன் முதல் கட்ட நடவடிக்ககைகள் 29 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்தில் நடைபெற இருந்ததுடன், தவிர்க்க முடியாத காரணத்தால் அது ஜூலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்களை பாதுகாக்க சமூகத்தின் பூரண ஒத்துழைப்பை பெறுவதும் இதன் ஒரு நோக்கமாகும்.

பாதிக்கப்பட்ட வர்த்தகர்களை கட்டியெழுப்ப அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்

நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடனைத் திரும்ப வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உள்நாட்டு வர்த்தகர்களை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வர்த்தகர்களின் சொத்துக்களை வங்கிகளுக்கு இறையாக்காமல் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

நுகேகொட, நாவல பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் அந்தப் பகுதியில் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே தற்போது அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment