பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (26.06.2018)

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸாரை நலம் விசாரித்த பொலிஸ் மா அதிபர்

மாத்தறை நகை கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பொலிஸ் மா அதிபர் இன்று (26) நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா சென்ற பொலிஸ் மா அதிபர் இன்று நாடு திரும்பினார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரான வசந்த புஷ்பகுமார, பொலிஸ் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தரான சுகதபால, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மொஹமட் பைசூலை தாக்கிய மூவரும் தொடர்ந்தும் சீர்திருத்த பள்ளியில்

உயிரிழந்த மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசூல் மீதான தாக்குதல் தொடர்பில், அரசாங்க சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 3 மாணவர்களையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கு இன்று (26) சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் 3 பேரும் கடந்த சில தினங்களாக சிலாபம், ஆரச்சிக்கட்டுவ சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களை இனி நீர்கொழும்பு முதித சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 16 வயதுடைய மொஹமட் பைசூல், சிலாபம் சவரான வித்தியாலயத்தின் பிரதான மாணவ தலைவனாக கடமையாற்றியுள்ளார்.

உயிரிழந்த மாணவனுக்கு அண்மையிலேயே பிரதான மாணவ தலைவன் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் இதனால் பொறாமை கொண்ட சில மாணவர்களே மொஹமட் பைசூல் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் உறவினர்கள் தெரித்துள்ளனர்.

விபத்தில் வெளிநாட்டவர் பலி

வெல்லவாய – எல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (26) காலை 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 78 வயதுடைய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டவர்கள் குழு ஒன்று பயணித்த பேருந்து எல்ல வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பிரான்ஸ் நாட்டவர் புகைப்படம் பிடிப்பதற்காக பாதையை கடக்க முற்பட்ட வேளையில் வெல்லவாயவில் இருந்து எல்ல நோக்கி பயணித்த பேருந்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment