பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (27.06.2018)

தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை, விபத்துத் தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளதாக, சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெறும் விபத்துக்களால், வருடாந்தம் 9,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று, இதன்போது கருத்து வெளியிட்ட, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்தார்.

“நாளாந்தம் இடம்பெறும் விபத்துகளால் 23 பேர் மரணிக்கிறார்கள். இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துகளால், 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்” என, அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் மாநாடு 2018

ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான உலகளாவியக் கருத்தாடல் மற்றும் ஆய்வுத் தளமாக அமையவுள்ளஇ ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் குறித்த உலகளாவிய மாநாடு, “உலகளாவிய ஊடகம் – 2018” என்ற தலைப்பில், எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில், கொழும்பில் நடைபெறவுள்ளது.

அறிவியல் முகாமைத்துவம் தொடர்பிலான சர்வதேசக் கல்வி நிறுவனம், டாக்கா பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் வளாகம், பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேசப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டுக்கு, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தமிழ் மிரரும் டெய்லி மிரரும் அச்சு ஊடகப் பங்களிப்பை வழங்குகின்றன.

மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியரும், அப்பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறையின் தலைவருமான றொபேர்ட் ஹஸன், ஹொங்கொங்கில் அமைந்துள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல்துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜோசப் எம். சான், இலண்டன் பல்கலைக்கழகத்தின்இ ஊடகத்துறை மற்றும் சமூகவியில் வளாகத்தின் பேராசிரியர் மைக்கல் ப்ரொம்லே ஆகியோர் இந்த மாநாட்டுக்குத் தலைமைதாங்க உள்ளனர்.

இம்மாநாட்டில், “ஊடகங்களின் பிழைத்தல்: போக்குகளும் நம்பகத்தன்மையும்” என்ற தலைப்பில், ஊடகங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் அவற்றைத் தாண்டி எவ்வாறு ஊடகங்கள் சிறப்பான பணியை ஆற்ற முடியும் என்பது தொடர்பாகவும், கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு ’டப்’ வழங்கலாமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு ‘டப்’ (கைக்கணினி) வழங்குவது தொடர்பில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனை, நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய இடம் வகித்ததெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதென, அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் மாணவர்களுக்கு ‘டப்’ வழங்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், தவறான பயன்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு, இதன்போது பணிப்புரை விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறுமாறு, கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சாதாரண கணினி அறிவு உள்ள ஒருவரால்கூட, குறித்த வகை கைக்கணினிகளுக்குள் உள்நுழைந்து (unlock) அதனை இயக்கமுடியுமென, பல்வேறு பல்கலைக்கழகங்களின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தம்மிடம் தெரிவித்தனர் எனவும், ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

எனினும், இந்தத் திட்டத்தை விமர்சித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியினர், பல பாடசாலைகளில் இன்றளவும் ஒழுங்கான மேசை உட்படத் தளவாடங்கள் மற்றும் பாடநூல்கள் இல்லை எனக் குற்றஞ்சாட்டுவதையும், அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார்.

எனினும், பாடசாலை பாடநூல்களுக்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென, ஜனாதிபதி இதற்கு பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

கொன்கிரீட் தூண்களில் ஏறுவதற்கு புதிய சப்பாத்துகள் தயாரிப்பு

கொன்கிறீட் தூண்களில் பாதுகாப்பாகவும், விரைவாகவும் ஏறக்கூடிய வகையில் இரும்பிலாலான சப்பாத்துகளை ஹட்டன் மின்சார சபை நிலையத்தின் அதிகாரி​யான நிஹால் சமரக்கோன் தயாரித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள் மின்சார இணைப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை ஏணியின் உதவியுடனேயே செய்து வரும் நிலையில், குறித்த அதிகாரியால் இந்த புதிய சப்பாத்துகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடக்கும் வேகத்தைப் போலவே இந்த சப்பாத்துகளை பயன்படுத்தி வேகமாக கொங்கிரீட் தூண்களில் ஏறமுடியுமென்பதுடன், இதன் மூலம் மின்சார தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ நிறையுடைய குறித்த சப்பாத்துகளை மின்சார சபையிடம் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக ஷேடன் அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிஹால் தெரிவித்துள்ளார்.

தாமரை மலர்களைப் பறிக்கச் சென்று நபர் பலி

மஹியங்கனை – தம்பராவ வாவியில் ​தாமரை மலர்களைப் பறிக்க சென்றிருந்த நபரொருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை – ரம்புக்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் உடல்நலக் குறைவால், நீண்ட காலமாக சிகிச்சைப்பெற்று வந்தவர் என்பதால், தாமரை மலர்களைப் பறிக்கச் சென்றிருந்த வேளையில், குறித்த நபர் வாவியில் மயக்கமடைந்து விழுந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்தப் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment