பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.06.2018)

பாதிக்கப்பட்ட அதிபருக்கு நட்ட ஈடு வழங்க பேசல ஜயரத்னவுக்கு உத்தரவு

நிவத்தக சேத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றிய சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்னவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அதிபருக்கு, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன 250,000 ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட அதிபருக்கு அரசாங்கமும் 50,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அநீதியான முறையில் குறித்த அதிபரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பயணிகள் போக்குவரத்து சேவை பிரச்சினைகள் குறித்து ஆய்வு

பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமான ஆய்வு இன்று முதல் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பஸ், புகையிரதம், முச்சக்கர வண்டி சேவைகள் ஊடாக மக்கள் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்டறிவது இதன் முதன்மை நோக்கம் என்று அதன் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் ஊடாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதுடன், அவர்கள் தயாரித்து வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சிசிர கோதாகொட கூறினார்.

இந்த ஆய்வு ஊடாக பொதுப் போக்குவரத்து சேவை சம்பந்தமாக காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

குளத்தில் நீராட சென்ற நபரை காணவில்லை

கொக்கரல்ல, இப்பாகமுவ குளத்தில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குளத்தில் நீராட சென்ற குழுவொன்றில் இருந்த ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமால் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாவத்தகம, இங்குருவத்த பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழு ஒன்றுடன் யாத்திரை பயணம் ஒன்றை மேற்கொண்ட குறித்த நபர், குளத்தில் நீராட சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

பிரதேசவாசிகளின் உதவியுடன் காணாமல் போனவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் இன்று

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று (28) சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (28) காலை 10 மணியளவில் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விஷேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

குறித்த எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதில் கலந்துரையாடப்பட உள்ளது.

இந்த கலந்துரையாடலில் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் எல்லை நிர்ணய குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் ஆணையாளர் உட்பட பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள உள்ளனர்.

Comments (0)
Add Comment