பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (28.06.2018)

சீனாவின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டுள்ள இலங்கை

சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பாலித தெவப்பெரும தெரிவித்துள்ளார்.

அதிக அளவான சீனர்கள் இந்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1330 பேர் உயிரிழந்ததாக அதன் பிரதிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.டீ.ஏ. தனஞ்சய கூறினார்.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1439 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை வீதி விபத்துக்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விஷேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் விஷேட வைத்தியர் சமித சிறிதுங்க கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடும் வாய்ப்பு கூட இப்போது இல்லை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடும் வாய்ப்பு கூட இப்போது பிள்ளைகளுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கால்டன் வீட்டில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் காரர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றவில்லை என்றால் பயனற்ற ஒரு சமூகம் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு ஒன்றையும் விற்பனை செய்வது இலகுவான விடயம் ஆனால் அவற்றை கட்டியெழுப்புவதே கஷ்டமான விடயம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை தொடர்பான திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது என்றும் எந்தவொரு திரைப்படங்களும் தேசிய திபை்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

திரைப்பட கூட்டுத்தாபன தலைவரின் இந்த தீர்மானத்திற்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாயத்துறையில் தொழில்நுட்ப புரிந்துணர்வினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அமெரிக்கா மேச்சன்ட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திடவுள்ளது.

இதன்மூலம் விவசாயத்துறையில் ஆய்வு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இதேபோன்று கொழும்பு, பேராதனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் விவசாய ஆய்விற்கான வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்

மஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்தது குறித்து விசாரணை தேவை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்த வழிமுறைகள் சம்பந்தமாக முறையான விசாரணை ஒன்றை நடத்துமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீனா பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வேறு நாடுகளில் இருக்கின்ற வர்த்தகர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சட்டவிரோத தொடர்புகளை வைத்திருந்ததாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த வர்த்தகர்களால் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment