பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (30.06.2018)

மாலபேயில் இருந்து புறக்கோட்டைக்கு ரயில் சேவை

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான ரயில்வே திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 ரூபா அபராதம் குறித்த பேச்சுவார்த்தை திங்கட்கிழமை

போக்குவரத்து விதி மீறல்கள் சிலவற்றுக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக சட்ட வரைவு திணைக்களத்திற்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக, சட்ட வரைவு திணைக்களத்தால் திருத்தங்கள் செய்யப்பட்டு போக்குவரத்து அமைச்சுக்கு சமர்பிக்கப்படும் அறிக்கையில் போக்குவரத்து அமைச்சர் கையொப்பமிட்ட பின்னர் வர்த்தமானியில் வௌியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

07 வகையான போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட உள்ளதுடன், அதற்காக மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை கூறத்தக்கது.

2020 தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர்

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்கள் சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார்.

கண்டியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

16 உறுப்பினர்கள் குழு இன்னுமே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலே இருப்பதாகவும், தாமரை மொட்டு என்பது ஒரு கட்சி அல்ல என்றும் அவர் கூறினார்.

2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரையே முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது

திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய திரைப்படத்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்குவதாவும் அவர் கூறினார்.

சகல தரப்புகளுடனும் கலந்துரையாடி இலங்கையின் திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை குறுகிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

திரைப்பட துறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் இனங்காணப்பட வேண்டியது அவசியமாகும். 2000 ஆம் ஆண்டு முதல் நான்கு நிறுவனங்களுக்கு மாத்திரமே திரைப்பட ஒளிபரப்புக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஏகபோக உரிமையால் திரைப்பட துறைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானதுஎன்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பிரதான நகரங்களில் உயர்தரத்திலான திரையரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

’கோட்டாவுக்கு அஞ்சோம்’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கே பயப்படாத ஐக்கிய தேசியக் கட்சி, ஒருபோதும், கேட்டாபய ராஜபக்ஷவுக்கு அஞ்சாது என்று, சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களையும் சமூர்த்தி பயனாளிகளையும் அறிவூட்டும் செயலமர்வு, நேற்று (29) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கேட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு, ஐக்கிய அமெரிக்க அனுமதி வழங்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment