பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (01.07.2018)

பணப்பெற்றதாக கூறப்படும் கருத்து போலியானது

முன்னாள் ஜனாதிபதி சைனா ஹாபர் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றதாக வெளியிடப்படும் அறிக்கை அரசாங்கத்தினால் போலியாக கோர்க்கப்பட்டவை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு ஒன்றும் புதியது இல்லை எனவும் 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் இது போன்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் மூன்றரை வருடங்கள் ஆகியும் இதுவரையில் அது தொடர்பில் எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் கண்டு பிடிக்க முடியாமல் போன ஒன்றை ஊடகவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் தேனீரின் விலை குறைப்பு

தேனீர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் குறைக்க சிற்றூண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று (01) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை குறைத்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மரக்கறிகளின் விலையை குறைத்தால் உணவு பொதிகளின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விபத்தில் இளைஞர் பலி

தம்புள்ள – குருணாகல் பிரதான வீதியின் தொங்கொங்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் நோக்கி பயணித்த வேன் ஒன்று குறுக்கு வீதி ஒன்றிற்கு திருப்புவதற்கு முற்பட்ட வேளை தம்புள்ள நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் கலேவல நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ள, இப்பன்கடுவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தினதும் வேனினதும் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீல மாணிக்கத்துடன் உகண்டா பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில், சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீல மாணிக்கக்கற்களை இலங்கைக்குக் கொண்டுவந்த உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையச் சுங்கப் பிரிவு அதிகாரிகள், கடந்த வௌ்ளிக்கிழமையன்று (29) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து, ஒன்று தொடக்கும் 10 கெரட் வரையான சுமார் 858 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த நபரை, நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவருக்கு, 30,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான், நீதிமன்றம் மாணிக்கக் கற்களை அரசுடமையாக்கியது.

ரயில்களில் யாசகம் கேட்போரை நீக்க நடவடிக்கை

ரயில்களில் யாசகம் கேட்போரை நீக்குவதற்கு இன்று (01) தொடக்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர் முறைப்பாடுகளுக்கு அமையவே, ரயில்களிலிருந்து யாசகர்களை நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, ரயில் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

Comments (0)
Add Comment