பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (02.07.2018)

குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் வைத்தியசாலையில்

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று (02) காலை 10 மணியளவில் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 பேரும் பெண்கள் எனவும், இவர்களில் 12 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

விவசாய அமைச்சினை பழைய இடத்தில் அமைக்க அனுமதி அவசியம்

விவசாய அமைச்சினை ஏற்கனவே அமைந்திருந்த, பத்தரமுல்லை இடத்தில் மீளவும் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அவசியமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

விவசாய அமைச்சு தற்போது ராஜகிரியவில் அமைந்துள்ள நிலையில் அதன் பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அமைச்சின் அலுவலகத்தை அமைப்பதற்காக 5 வருட குத்தகை அடிப்படையில் ராஜகிரியவில் கட்டடம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.

குறித்த அலுவலகத்தின் முதல் மூன்று வருட வாடகைத் தொகையான 504 மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஏற்கனவே செலுத்தியிருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு வருடங்களுக்கான வாடகை வரி 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டடத்துக்கான, ஐந்து வருடங்களுக்கான மொத்த வாடகைத் தொகை 960 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவேளை, இதுத் தொடர்பில் கருத்து வெளியிட்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்வாறான சொகுசு கட்டடம் ஒன்று விவசாய அமைச்சுக்கு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆகவே அமைச்சினை பழைய இடத்தில் மீளவும் அமைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் இந்த விடயத்தில் சபாநாயகர் தனித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

களுத்துறை பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

நேற்று (01) இடம்பெற்ற வீடுகளை கையளிக்கும் நிகழ்வில், சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பங்கேற்று பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இரண்டு கோடி 90 இலட்ச ரூபா செலவில் இந்த வீடுகளை அமைத்துள்ளது. ஒவ்வொரு வீடும் தலா 7 பேர்ச் காணியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது 10 இலட்சம் ரூபா செலவில் கொங்கீரிட் இடப்பட்டு சீர்செய்யப்பட்ட பாதையும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

‘மொட்டு உறுப்புரிமை எனக்கு வேண்டாம்’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்​கொள்வதற்குத் தான் தயாரில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், தான் அதற்கு அடிப்பணியமாட்டேனெனத் தெரிவித்த அவர், ஒன்றிணைந்த எதிரணியில் இருப்போர் யாரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment