பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (02.07.2018)

பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது

நாடாளவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் போலி பிரசாரங்களை ஊடகங்களின் மூலம் வழங்குவதன் ஊடாக முழு பாடசாலை கட்டமைப்புக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தினார்.

ஊழல் மோசடி, விரயம், திருட்டு போன்ற செயற்பாடுகளில் இருந்து கல்வித்துறை மீட்கப்பட்டுள்ளது. நியமனங்களும் கல்வி உயர்வுகளும் அரசியல் பேதங்கள் இன்றி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழிற்சங்கங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

4 ஆம் திகதி பாடசாலை மூடப்படுமென வெளிவரும் தகவல்களால் 42 இலட்ச மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தனிநபர்களின் அரசியல் தேவைகளுக்காக கல்வியுடன் விளையாடுவதை தவிர்க்குமாறு சகலரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

2 கிராம் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

2 .18 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பொரள்ள பகுதியை சேர்ந்த புஷ்ப ஜயன்த பெரேரா என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றம் தொடர்பில் குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணையின் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கியதில் பலி

மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு காட்டுப்ப் பகுதியில் தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை கட்டுமுறிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதுடைய வேலன் நவரெட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

தற்போது தேன் எடுக்கும் காலம் என்பதால் குறித்த பிரதேசத்தில் காட்டுப்குதியை அண்டிய குளத்திற்கு அருகில் சம்பவ தினமான இன்று அதிகாலை 5 மணியளவில் தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் எதிரே வந்த காட்டு யானை குறித்த நபரை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து யானைக் கூட்டம் அங்கிருந்து சென்ற பின்னர் இவரின் சடலத்தை மீட்க முடிந்தாகவும் அதன் பின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக வாகரை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னும் இருப்பது ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே – அதுவரை பொறுமையாக இருங்கள்

நாட்டில் உள்ள அனைத்து யானை வேலிகளையும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க எதிர்பார்ப்பதாக வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு மேலும் சேவை செய்ய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஒரு வருடத்திற்குள் யானை வேலிகளை செய்து முடிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனால் அவற்றை நிறைவேற்றும் வரை மக்கள் பொறுமையாக இருக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 4500 கிலோ மீற்றர் வரையான யானை வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வேலிகளை கொண்டு இலங்கை இரண்டு மூன்று முறை சுற்ற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் அல்லாமல் மேலும் 2500 கிலோ மீற்றர் அளவான யானை வேலிகள் வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த கோரிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment