பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (03.07.2018)

திருடர்களை அரசியலுக்கு கொண்டு வருவதால் மக்களுக்கு தான் கஷ்டம்

திருடர்களை அரசியலுக்கு கொண்டு வருவதால் மக்கள் தான் இறுதியில் கஷ்டப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியரத்ன தெரிவித்துள்ளார்.

பதுள்ளையில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்திருந்தாலும் அவர்கள் மீண்டும் அதே அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிகளுக்கும் திருடர்களுக்கும் தண்டனை வழங்குவதாக தெரிவித்து இந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஊழல்வாதிகளும் திருடர்களும் சுதந்திரமாக வெளியில் இருப்பதாகவும் மக்கள் இதனை மாற்றும் வரையில் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

றம்புட்டான் விதை சிக்கி சிறுவன் பலி

கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தில் வசித்து வந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தொண்டையில் றம்புட்டான் சிக்கியதில் பரிதாபகமாக உயிரிழந்துள்ளார் என்று புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் (வயது 06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கேட்டு கடிதம் கொடுக்க தீர்மானம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற தமது குழுவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கவேண்டுமெனக் கோரி, ஒன்றிணைந்த எதிரணி, கடிதமொன்றை கையளிக்கவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவிடமே, இந்தக் கடிதத்தை, அவ்வணி கையளிக்க தீர்மானித்துள்ளது.

தங்களுடைய அணியில், 70 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்றும், தமது தரப்புக்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவேண்டுமென்றும், அவ்வணி கோரிக்கைவிடுக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரில், 15 பேர் பங்கேற்றிருந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

Comments (0)
Add Comment