பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (04.07.2018)

விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடுமையான தீர்மானம்..!!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானமொன்றை எடுக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுபோன்ற கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானம் எடுக்கும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஹெரவ்பத்தான மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதிகளுக்கான புதிய அமைப்பாளர்கள் நியமிப்பு

ஹெரவ்பத்தான தேர்தல் தொகுதிக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அம்பாறை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜேவிக்கிரமவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் இன்று (04) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் வைத்து அவர்களுடைய நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த இருவரும் குறிப்பிட்ட இரு தேர்தல் தொகுதிகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களாகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு எதிரான வழக்கொன்று ஒக்டோபர் மாதம் 10ம் திகதிக்கு

140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதி தரப்பு பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக பதில் வழங்குவதற்கு அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளின் படி நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அதற்கு முன்னர் எழுத்துமூலம் பதில் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.​ே

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments (0)
Add Comment