பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (05.07.2018)

இணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு

தற்போது இலங்கையில் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

கைத்தொலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக, கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து கூட்டு வியாபாரமாக நடத்திச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய அரச அதிகாரிகளுடன் நேற்று (04) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இந்திய அரசிற்கு 70 வீதமான பங்கும், இலங்கை அரசிற்கு 30 வீதமான பங்கும் கிடைக்கும் விதத்தில் ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்று

தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்று (05) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாள் முழுவதும் இது தொடர்பான விவாதம் நடைபெற உள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (05) காலை 10 மணியளவில் பாராளுமன்றம் அமர்வு ஆரம்பமானது தொடக்கம் தேசிய கணக்காய்வு அறிக்கையின் இரண்டாம் கட்ட விவாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தலை பிற்போட எந்த வித தேவையும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment