பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (05.07.2018)

கல்வி கண்காணிப்பு சபை அமைக்க தீர்மானம்

அரச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக “கல்வி கண்காணிப்பு சபை” அமைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வியின் தரத்தை மேம்படுத்தும் அரசின் கொள்கை செயற்பாட்டின் கீழ் இந்த கண்காணிப்பு சபை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சின் கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்திறன் ஆய்வு சம்பந்தமான மேலதிக செயலாளர் கலாநிதி மதுரா வெகெல்ல கூறினார்.

சமமான கல்வி வாய்ப்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் ஆசிரியர்களின் தகுதி போன்று கல்வி வகைகள் சம்பந்தமாக இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் விரைவாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மதுரா வெகெல்ல மேலும் கூறினார்.

யசோத ரங்கே பண்டாரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 06 ஆம் திகதி, அதிகாலை யசோத ரங்கே பண்டார பயணித்த கெப் வாகனம், சிலாபம் – புத்தளம் வீதியில் பங்கதெனிய, கொட்டபிட்டிய சந்தியில் உள்ள வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து ஶ்ரீஜயவர்தபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அதேநேரம் இன்றைய தினத்திற்கு முன்னர் சேதமடைந்த வீட்டை திருத்திக் கொடுக்குமாறு கடந்த வழக்கு தவணையின் போது அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் வீட்டின் திருத்தப் பணிகள் 90 வீதமளவு நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த வழக்குத் தவணையின் போது அவற்றை பூர்த்தி செய்து விடுவதாகவும் யசோத ரங்கே பண்டார சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் இன்று (05) தெரிவித்தார்.

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 19ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையை சோதனைக்கு உட்படுத்திய போது அவரது சிறை அறையில் இருந்து 03 கைத்தொலைபேசிகளும் 05 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு கைத்தொலைபேசி அவரின் சிறைச்சாலை மெத்தைக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு டப்ளியூ. எம் மெண்டிஸ் நிறுவனத்தினால் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு 05 மில்லியன் ரூபா காசோலை வழங்கப்பட்டதாகும், அதனை சின்னையா என்ற நபர் பணமாக மாற்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் பதவி விலகும் வகையில் அவரது அலுவலகத்தில் சற்றுமுன்னர் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2017ம் ஆண்டு ஜூலை மாதம் 01ம் திகதி முதல் அவரச ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றினார்.

பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் மீதான தடை நீடிப்பு

பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று 05ம் திகதி முதல் பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு முதன்மை விநியோகஸ்தராக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாத்தறை சம்பவம்; பிரபுக்கள் பாதுகாப்பு துப்பாக்கிகள் சம்பந்தமாக தகவல் இல்லை

அண்மையில் மாத்தறையில் தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பிரபுக்களின் பாதுகாப்பு பிரிவுடன் சம்பந்தப்பட்டதல்ல என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

குற்றங்களை தடுப்பதற்காக உச்ச அளவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment