பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (06.07.2018)

பேலியகொடயில் அமோனியா கொள்கலன் வெடிப்பு

பேலியகொடவில் அமோனியா நிறம்பிய கொள்கலன் ஒன்று வெடித்துள்ளது

பேலியகொட மீன்சந்தைக்கு அருகாமையில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தமான தகவல்களை பகிரங்கப்படுதிய வழக்கு ஒத்திவைப்பு

புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தமான தகவல்களை பகிரங்கப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கண்டி முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த மாதம் 23ம் திகதி வரையில் பிற்போடுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதிவாதியான முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல நீதிமன்றில் ஆஜராகியிருந்ததுடன், அவர் சார்பான சட்டத்தரணி வழக்கை பிற்போடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி வழக்கு விசாரணை எதிர்வரும் 23ம் திகதிக்கு பிற்போடப்பட்டதுடன், அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

2002ம் ஆண்டு ஜனவரி மாதம் 02ம் திகதி அத்துருகிரிய மில்லேனியம் சிட்டி வீட்டுத் தொகுதியில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இருந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்த புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தமான தகவல்களை பகிரங்கப்படுத்தியதாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு அழைப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பணிகளை செய்து, 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் அவர் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியின் செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டச் சான்றிதழில் சைட்டம் நீக்கம்

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட சைட்டம் மாவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தில் சைட்டம் என்ற பெயரை நீக்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தாமரை தடாகத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

சைட்டம் மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டதில் அவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தில் அடைப்புக்கள் சைட்டம் என குறிப்பிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இதற்கு மாணவர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment