பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (08.07.2018)

சிங்கப்பூர் நோக்கி விஜயத்தை மேற்கொண்ட பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சிங்கப்பூர் நோக்கி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற உள்ள 06 ஆவது ´சர்வதேச நகரம்´ மாநாடு உள்ளிட்ட சில கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் உயர் மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட உள்ளார்.

103.9 கி​லோகிராம் ஹெரோய்னுடன் இருவர் கைது

103.9 கிலோகிராம் ஹெரோய்னுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி 1,248 மில்லியன் எனவும், களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்தே இவற்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 29 மற்றும் 40 வயதானவர்களெனவும், இவர்கள் ஹெரோய்னைக் கடத்துவதற்கு பயன்படுத்திய காரொன்றும், ஓட்டோவொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்

மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தவில்லை எனின் அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முற்படுவதனால் மேலும் தேர்தல் பிற்போடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment