பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (10.07.2018)

இந்தியாவில் இருந்து தபால் மூலம் ஹெரோய்ன் கடத்தல்

இந்தியாவில் இருந்து தபால் ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் இலங்கை சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 227 கிராம் ஹெரோய்ன் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

குறித்த ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த நபர் உட்பட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் சிறைச்சாலையில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று அமைச்சரவையில் கலந்துரையாடல்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் (10) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

நிதியமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக கடந்த 05ம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

எனினும் பின்னர் அந்த விலை அதிகரிப்பு அரசாங்கத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலைச் சூத்திரத்திற்கு அமைவாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தைப் படி விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சு கூறியிருந்தது.

குறித்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளது.

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்பு

19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளனர்.

நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமத்தின் தலைவர் நிமல் கருணாசிறி குறிப்பிட்டார்.

19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினை உட்பட தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை முன்னிறுத்தி, எதிர்வரும் வாரம் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

Comments (0)
Add Comment