பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (10.07.2018)

ஐ.கே மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்பு

19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளனர்.

நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமத்தின் தலைவர் நிமல் கருணாசிறி குறிப்பிட்டார்.

19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினை உட்பட தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை முன்னிறுத்தி, எதிர்வரும் வாரம் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோட்டாவுக்கு எதிராக குமார் வெல்கம போர்க்கொடி

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் குறைந்தபட்சம் பிரதேசசபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை அவரால் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திரம், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு, நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கான உரிமையும் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அணியில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை தொடர்பில் இறுதி தீர்மானம்!!!

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கிடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எரிபொருள் விலை தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றினை பெறுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment