பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (10.07.2018)

இலஞ்சம் பெற்ற கல்குடா பொலிஸ் நிலையத்தின் உயரதிகாரி கைது

கல்குடா பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவருக்கு பொலிஸ் நற்சான்றிதழ் வழங்குவதற்காக அவர் 05 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதுடன், அதில் 03 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமலுக்கு எதிரான வழக்கொன்று ஒத்திவைப்பு

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது சாட்சியாளருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து, அடுத்த விசாரணையின் போது சாட்சியாளரை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்

பாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் அவருடைய கணவர் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

எரிபொருள் விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment