பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (11.07.2018)

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் சம்பள சூத்திரம் வேண்டும்

எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற விலைச் சூத்திரத்தை நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.

அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ள முடியாதுள்ள பொது மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ளமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் விலைச் சூத்திரத்தின் ஊடாக எரிபொருள் விலையை அதிகரிப்பதாக இருந்தால் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளமும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் தனி அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்

2020 ஆம் ஆண்டாகும் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே கட்சியின் நோக்கம் என கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை, ஐக்கிய தேசியக் கட்சிக்​கே எனவும் கடந்த தினத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை அமுல்படுத்துவதில் தாமதம்

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு “பெப்ரல்” அவதானம் செலுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அந்த அமைப்பு இதுத் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அசமந்தபோக்கு தெரிகிறது.

இது நாட்டின் இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் அவதூறிழைக்கும் செயற்பாடாகும்.

எனவே நாடாளுமன்றத்தின் பிரதானி என்ற வகையில் சில விடயங்கள் குறித்து நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச காணிகளில் வசிப்போருக்கு நிரந்தர உறுதி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறு மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்குவது தொடர்பான தேசிய திட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம், இரத்தினபுரி மெல்பதுளை நகரில் நேற்றைய தினம் இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் “காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான காலாவதியான சட்ட திட்டங்களையும் நிபந்தனைகளையும் தளர்த்த வேண்டியுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளிலும், அரச காணிகளிலும் வசிப்போருக்கு நிரந்தர உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “நாட்டிலுள்ள பல அரச நிறுவனங்களும், மத வழிபாட்டுத் தலங்களும், பாடசாலைகளும் காணி உறுதிப்பத்திரங்களை கொண்டிருக்கவில்லை. காணிகளை முறையாக அளந்து, உறுதிப்பத்திரங்களை வழங்கும் நோக்கில் பாரியதொரு திட்டம் அமுலாக்கப்படும்” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment