பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (12.07.2018)

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி

காட்டு யானை தாக்கியதில் அம்பன்பொல, பத்தினகம பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) இரவு இந்த யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தினிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் இன்று பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளது.

அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய்லாந்து பிரதமர், கண்டிக்கு விஜயம்

இலங்கைக்கு இன்றுமாலை விஜயம் செய்யவிருக்கும் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, நாளை வௌ்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தலதா மாளிகைக்குச் செல்லும் அவர், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார்.

அத்துடன், பேராதனை தாவிரவியல் பூங்கா மற்றும் கண்ணொருவை விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகியனவற்றுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

மீற்றர் இல்லாது ஓடும் ஓட்டோகளுக்குத் தண்டம்

கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் ஓட்டோக்கள் தொடர்பிலான சோதனை நடவடிக்கை, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, ​பொலிஸார் முன்னெடுப்பர் என்று தெரிவித்த வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை, அவ்வாறான ஓட்டோக்களைச் செலுத்துவோரிடமிருந்து தண்டம் அறவிப்படும் என்றும் அறிவித்துள்ளது.

விடயதானத்துக்குப் பொறுப்பான, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளாரென, அந்தச் சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

“அதனடிப்படையில், ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, ஓட்டோக்களில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீற்றரில்லாத ஓட்டோக்களைச் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதற்கான பரிந்துரைகளை, ஓட்டோகளில் கட்டண மீற்றரில்லாமல் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது தொடர்பில் ​தேடியறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவே முன்வைத்துள்ளது. அதனடிப்படையிலேயே, மேற்​கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment