பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (16.07.2018)

அரசாங்கத்திற்கு எதிராக நாளை முதல் மாபெரும் வேலைநிறுத்த போராட்டம்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு எத்தனிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை சிக்கலுக்குரியது

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுடன் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை தொடர்பில் சிக்கல்கள் உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல உறுப்பினர்களின் விருப்பத்திற்கு இணங்க கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘அடுத்த வாரம் உண்மை வெளிவரும்’

முன்னாள் ஜனாதிபதி ​மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, சீனாவினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் தொடர்பான முழுமையான தகவல்களை, அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

இவ்வாறு பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான உரிய ஆதாரங்களுடன், நாடாளுமன்றத்தில் அந்தத் தகவல்களை வெளியிடவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மஹரகம பிரதேசத்தில், நெற்று (15​) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், தாம் வழங்கவுள்ள ஆதாரங்களைக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அவரது குழுவினருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

‘மரணதண்டனை அமுலாவது மைல்கல்லை எட்டும்’

பாரிய போதைப்பொருள் விநியோகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது, குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இது, மைல்கல்லை எட்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

கண்டியில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சமூகத்தில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மீறப்படும் போதே, தண்டனை தொடர்பான சட்டங்கள் வலுப்பெறுவதாகவும் இலங்கையில் மரண தண்டனை தொடர்பான விடயங்கள், தண்டனைச் சட்டக்கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளதால், அதனை அமுல்படுத்துவதில் சில நெருக்கடிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பிரதானமாக, இலங்கையில் தற்போது அதிகரித்துச் செல்கின்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குற்றச்சம்பவங்களுக்குத் தீர்வு காணும் முகமாக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்ற கருத்து உருவாகியுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தியடைந்த அனைத்து நாடுகளிலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நடைமுறை காணப்படுவதாகவும் இது, சிங்கப்பூர் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில்கூட அமுலில் உள்ளதாகவும் கூறினார்.

புதிய அரசமைப்பு வரைவு புதனன்று சமர்ப்பிக்கப்படும்

புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் உப பிரிவு 6இன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி புதிய அரசமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக,

அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், பல்வேறு கட்சியினர் வழங்கிய யோசனைகள் அடங்கிய குறிப்பொன்றும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

இந்த வரைவானது, புதிய அரசமைப்பு தொடர்பில், இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடலுக்குத் தேவையான ஆவணமாக மாத்திரமே பயன்படுத்தப்படுமென, அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment