பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (16.07.2018)

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறு வேண்டுகோள்

சீரற்ற காலநிலை காரணமாக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு கட்டுப்படுத்தியுள்ளதாக குறித்த பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விஷேடமாக சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் ஓட்டுனர்களும் ஏனைய ஓட்டுனர்களும் தூக்கத்தினால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறித்தியுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானங்கள்

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் இன்று (16) அதிகாலை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக விமான நிலையத்தில் தரையிறக்குவதற்காக வந்த இரு விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 226 என்ற விமானம் இன்று அதிகாலை 4.35 மணியளவில் தரையிறங்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விமானம் இன்று காலை 5.50 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் குறித்த விமானம் காலை 7.07 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை இந்தியாவின் மும்பையில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 142 என்ற விமானம் இன்று அதிகாலை 5.35 மணியளவில் தரையிறங்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விமானம் இன்று காலை 6 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் காலநிலை வழமைக்கு திரும்பிய பிறகு குறித்த விமானம் காலை 7.20 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இருந்து வெளியாகி 7.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்க 904 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு நிதி பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அண்மையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்காக நிதியுதவி, வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்திற்காக ஜப்பானின் மிட்சுபிஷி UFJ நிதிக் குழு (MUFG), இலங்கைக்கு சுமார் 904 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையானது கொழும்பு முதல் தம்புள்ளைக்கு இடைப்பட்டதாகும்.

இறுதியாக வழங்கப்பட்ட கடன் தொகையானது, பொதுஹர – கலகெதர இடையிலான 32.5 கிலோ மீட்டர் வரையிலான பாதை அமைப்புக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்ககொள்ளப்பட்டது.

இதன்போதே மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யின்துடுவவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு அமெரிக்காவிற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றத்தில் உள்ள அவரது கடவுச்சீட்டை 2 இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment